சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
3.049   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   காதல் ஆகி, கசிந்து, கண்ணீர்
பண் - கௌசிகம்   (நல்லூர்ப்பெருமணம் -நமசிவாயத் திருப்பதிகம் )
Audio: https://www.youtube.com/watch?v=RYMXxRvZB8I
Audio: https://www.youtube.com/watch?v=5dzknic0_uA

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.049   காதல் ஆகி, கசிந்து, கண்ணீர்  
பண் - கௌசிகம்   (திருத்தலம் நல்லூர்ப்பெருமணம் -நமசிவாயத் திருப்பதிகம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
திருஞானசம்பந்தர் தன் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் புரிந்து கொண்டு தம் மனைவியுடன் சுற்றம் சூழ திருநல்லூர் பெருமணம் ஆலயம் வந்து இறைவனைத் துதித்தார். கோவிலில் பெருஞ்சோதி தோன்றி ஒரு வாயிலையும் வகுத்துக் காட்டியது. சம்பந்தர் தன்னுடன் வந்த சுற்றத்தாரையும் அடியார்களையும் சிவசோதியில் கலந்து முக்தி அடையும் படி கூறினார். சிலர் நெருப்புச் சோதியைக் கண்டு தயக்கமும் அச்சமும் கொள்ள, சம்பந்தர் அவர்களுக்கு நமச்சிவாய மந்திரத்தின் மேன்மையைக் கூறி நமச்சிவாய திருப்பதிகம் பாடி தம்முடன் வந்தோரை எல்லாம் அச்சோதியில் புகுமாறு சொல்லி, தாமும் தன் மனைவியுடன் சோதியுட் புகுந்து இறைவன் திருவடியைச் சேர்ந்தார். சம்பந்தருடன் சேர்த்து திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகிய நான்கு நாயன்மார்கள் ஒரே நாளில் ( வைகாசி மூலம் ) ஒரே இடத்தில் முக்தி அடைந்தனர்
நம் தீவினைகள் அகல, நாம் செய்த பாவங்கள் நீங்க, மற்றும் இறைவன் அடி கிடைக்க
காதல் ஆகி, கசிந்து, கண்ணீர் மல்கி,
ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது;
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.

[1]
நம்புவார் அவர் நாவின் நவிற்றினால்,
வம்பு நாள்மலர் வார் மது ஒப்பது;
செம்பொன் ஆர் திலகம், உலகுக்கு எல்லாம்;
நம்பன் நாமம் நமச்சிவாயவே.

[2]
நெக்கு உள், ஆர்வம் மிகப் பெருகி(ந்) நினைந்து
அக்கு மாலை கொடு அங்கையில் எண்ணுவார்
தக்க வானவராத் தகுவிப்பது
நக்கன் நாமம் நமச்சிவாயவே.

[3]
இயமன் தூதரும் அஞ்சுவர், இன்சொலால்
நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால்;
நியமம்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி
நயனன், நாமம் நமச்சிவாயவே.

[4]
கொல்வாரேனும், குணம் பல நன்மைகள்
இல்லாரேனும், இயம்புவர் ஆயிடின்,
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சிவாயவே.

[5]
மந்தரம்(ம்) அன பாவங்கள் மேவிய
பந்தனையவர் தாமும் பகர்வரேல்,
சிந்தும் வல்வினை; செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே.

[6]
நரகம் ஏழ் புக நாடினர் ஆயினும்,
உரைசெய் வாயினர் ஆயின், உருத்திரர்
விரவியே புகுவித்திடும் என்பரால்-
வரதன் நாமம் நமச்சிவாயவே.

[7]
இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல் மேல்
தலம் கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்,
மலங்கி, வாய்மொழி செய்தவன் உய் வகை
நலம் கொள் நாமம் நமச்சிவாயவே.

[8]
போதன், போது அன கண்ணனும், அண்ணல்தன்
பாதம் தான் முடி நேடிய பண்பராய்,
யாதும் காண்பு அரிது ஆகி, அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சிவாயவே.

[9]
கஞ்சி மண்டையர், கையில் உண் கையர்கள்
வெஞ் சொல் மிண்டர் விரவிலர் என்பரால்-
விஞ்சை அண்டர்கள் வேண்ட, அமுது செய்
நஞ்சுஉண் கண்டன் நமச்சிவாயவே.

[10]
நந்தி நாமம் நமச்சிவாய! என்னும்
சந்தையால்,-தமிழ் ஞானசம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம்
பந்தபாசம் அறுக்க வல்லார்களே.

[11]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list